சீர்காழி அருகே ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிகள் - அதிகாரி ஆய்வு


சீர்காழி அருகே ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிகள் - அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2019 3:15 AM IST (Updated: 24 Aug 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே ஜல்சக்தி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை அதிகாரி சஞ்சீபட்ஜோஷி ஆய்வு செய்தார்.

சீர்காழி,

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மத்திய நீர் மேலாண்மை திட்ட கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளருமான சஞ்சீபட்ஜோஷி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை பார்வையிட்டார். மேலும் ஊராட்சியில் உள்ள நூலகம், ரேஷன் கடை, பள்ளிகள், சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் போன்ற அரசு கட்டிடங்களில் மழைநீர் சேமிக்கும் தொட்டி அமைக்க கேட்டு கொண்டார். தொடர்ந்து ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவில் குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும், கிராமங்களில் உள்ள அனைவரும் பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்று கேட்டு கொண்டார். பின்னர் மாநில மற்றும் மாவட்டங்களை ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் தரவரிசை படுத்துவதற்கான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

ஆய்வின்போது, நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், மத்திய நீர்வள திட்ட துணை இயக்குனர்கள் கிரிதரன், தரம்வீர்சிங், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, பொறியாளர் தாரா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாமாகுடி கிராமத்தில் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரும் பணி, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவது, மரம் நடுவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் தரம்வீர்சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாமாகுடி, பூந்தாழை, அப்புராசபுரம் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். மேலும் துணை இயக்குனர், அப்புராசபுரம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் நடுவதின் பயன்கள் குறித்து விளக்கி பேசினார்.

ஆய்வின்போது செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, ஒன்றிய பொறியாளர் விஜயன், ஒன்றிய மேற்பார்வையாளர் ராஜேஷ் கண்ணா, ஊராட்சி செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story