தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் 10 பேர் கைது
தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக போலீஸ்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் போலீசார் தீவி்ர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி மாவட்ட எல்லை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சோதனை சாவடிகளில், போலீசாரின் உரிய சோதனைக்கு பின்னரே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கடலோர பகுதியான முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதியில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட 10 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 600 போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story