நீர்நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசு மீது 2 வார காலத்திற்குள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: வக்கீல் யானை ராஜேந்திரன் பேட்டி
நீர்நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசு மீது 2 வார காலத்திற்குள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட உள்ளதாக வக்கீல் யானை ராஜேந்திரன் கூறினார்.
கும்பகோணம்,
சமூக ஆர்வலரும், பொதுநல வக்கீலுமான யானை ராஜேந்திரன் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிப்பதற்கு முன்பு கும்பகோணம் பகுதியில் உள்ள நீர் நிலைகள் காப்பாற்றப்பட வேண்டும்.
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் 44 குளங்கள் மற்றும் 11 வாய்க்கால்கள் அமைந்துள்ளது. இதுகுறித்து கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் கண்டுபிடிக்கப்பட்டு கல் ஊன்றப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஐகோர்ட்டு இந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு ஆண்டுக்குள் அகற்றி அவற்றை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வருடம் நான்கு மாத காலம் ஆன நிலையில் இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே இரண்டு வார காலத்திற்குள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி கும்பகோணம் பகுதியில் உள்ள நீர் நிலைகளை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளேன். எனவே தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இதேபோல் நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தில் கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன்மாதேவி சிலை திருட்டு தொடர்பாக வேதாரண்யம் போலீசில் நான் புகார் கொடுத்திருந்தேன். தற்போது இந்த வழக்கு பொன்மாணிக்கவேல் குழுவினரின் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் முறையிட்டு வருகிறேன். மேலும் வருகிற 14-ந் தேதி அமெரிக்காவிற்கு சென்று வாஷிங்டன் அருகே உள்ள பெரார் அருங்காட்சியகத்தில் உள்ள செம்பியன்மாதேவி சிலையை மீட்க நடவடிக்கை எடுப்பேன்.
இந்த சிலையை மீட்டு விரைவில் இந்தியா கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறேன். இதன் பின்னர் லண்டனில் உள்ள சிவகாமி அம்மன் சிலையை மீட்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன். இந்த சிலை வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story