மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2,983 பேர் எழுதுகின்றனர் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2,983 பேர் எழுதுகின்றனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கான காவலர் எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கரூர் வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அதன் அருகேயுள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெற உள்ளது. மொத்தம் 2,983 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் காலை உணவை முடித்து கொண்டு நாளை மறுநாள் காலை 7.30 மணியளவில் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வு மையத்திற்கு காலை 10.15-க்கு பிறகு வரும் விண்ணப்பதாரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்கூட அனுமதி சீட்டினை தவறால் எடுத்து வர வேண்டும். அதனை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யும் போது அதில் புகைப்படம் தெளிவாக இல்லையெனில், பாஸ்போர்ட்டு அளவு புகைப்படத்தினை அதே அழைப்பு கடிதத்தில் ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி கொண்டு வர வேண்டும். அத்துடன் தனியாக 2 புகைப்படம் கொண்டுவர வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகலை கொண்டுவர வேண்டும். செல்போன், மின்னணு கைக்கடிகாரம், புளுடூத், கால்குலேட்டர் மற்றும் மின்சாதன உபகரணங்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது. அவ்வாறு எதாவது பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பொருளை தங்கள் பொறுப்பிலேயே வெளியில் வைத்து விட்டு வர வேண்டும். இந்த தேர்வையொட்டி சிறப்பு பஸ்கள் கரூர் பஸ் நிலையத்திலிருந்து தேர்வு மையத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story