கீரமங்கலம் அருகே, என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை- ரூ.75 ஆயிரம் பணம் திருட்டு
கீரமங்கலம் அருகே என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள காசிம்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது புகாரி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பைசல் (வயது 24). என்ஜினீயரான இவர் குடும்பத்துடன் காசிம்புதுப்பேட்டையில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டிவிட்டு, பைசல் தனி அறையிலும், அவரது அம்மா மற்றும் தங்கை ஒரு அறையிலும் தூங்கினர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டும், மரக்கதவும் திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இரும்பு பெட்டகம் வைத்திருக்கும் அறைக்கு சென்றனர். இரும்பு பெட்டகமும் திறந்து கிடந்தது. இது குறித்து பைசல் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கியவுடன் மர்ம ஆசாமிகள், வீட்டின் பின்பக்க கதவுகளை எந்தவித சத்தமும் இல்லாமல் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் இரும்பு பெட்டகத்தை உடைத்து, அதில் இருந்து 18 பவுன் தங்கநகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் வீட்டின் பின்பக்கம் உள்ள குப்பை தொட்டியில் மதுபாட்டில்களும், அருகே பணம், நகை இருந்த பைகளும் வீசப்பட்டு இருந்தது. தடயவியல் நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை சேகரித்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story