முக்கிய கோவில்களில் தீவிர கண்காணிப்பு; ரெயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


முக்கிய கோவில்களில் தீவிர கண்காணிப்பு; ரெயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 10:21 PM IST)
t-max-icont-min-icon

தீவிரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ரெயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஈரோடு,

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பிரபலமான கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் வாகன சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகள் மற்றும் எல்லை பகுதியான சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாட்ஜ்களில் தங்கி உள்ளவர்களின் விவரங்களை போலீசார் சோதனையிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும், ஓடும் ரெயில்களிலும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டது. மேலும், சந்தேகப்படும்படி சுற்றி திரியும் நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதேபோல் முக்கிய கோவில்களான ஈரோடு பெரிய மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், கொங்கலம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சைமலை முருகன், கொடுமுடி மகுடேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவில்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கோவில் வளாகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story