விவசாய கடன் வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி; 2 பேர் கைது


விவசாய கடன் வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 5:02 PM GMT)

விவசாயத்திற்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 22½ லட்சத்தை மோசடி செய்ததாக கம்பத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லல்,

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ராஜாசண்முகம் (வயது 49). இவர் தேசிய வேளாண் மேலாண்மை கழகம் என்ற ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் வங்கிகளில் வேளாண்மை கடன் மற்றும் வேளாண் தொழிற்கருவிகள் வாங்க கடன் வாங்கி தருவதாக அறிவித்தார். மேலும் கடன் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை தனக்கு கமிஷனாக வழங்கும்படியும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிவகங்கையை அடுத்த மதகுபட்டியில் ஒரு கிளை அலுவலகத்தை தொடங்கினார். இந்த அலுவலகத்தின் மேலாளராக ரமேஷ்குமார் (50) பணியாற்றினார். இவர் அந்த பகுதியில் விவசாய கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி மதகுபட்டி மற்றும் பாகனேரி பகுதியை சேர்ந்த 24 பேர் தங்களுக்கு கடன் பெற்று தரும்படி கேட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் விவசாய கடனுக்காக 5 சதவீதம் கமிஷனாக ரூ.22 லட்சத்து 55 ஆயிரத்தை ராஜாசண்முகத்திடம் வழங்கினார்களாம். அதைத்தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட அவரும், ரமேஷ்குமாரும் வங்கியில் விவசாயத்திற்கான கடனை வாங்கி தரவில்லையாம். தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் வங்கி கடன் குறித்து கேட்ட போது, திடீரென கடந்த 2 மாதத்திற்கு முன்பு ராஜாசண்முகம் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜாசண்முகம் மதகுபட்டி வந்தார். இதையறிந்த கிராம மக்களும், பணம் கொடுத்தவர்களும் ஒன்று சேர்ந்து அவரையும், கிளை நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ்குமாரையும் பிடித்து மதகுபட்டி போலீசில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி ராஜாசண்முகம், ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story