கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமா? முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்


கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமா? முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமா? என்பது குறித்து முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமா? என்பது குறித்து முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.

தலைவர் பதவியை கைப்பற்ற...

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைதொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கவும், எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் பதவிகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையாவை நியமிப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

இதனால் மாநில தலைவர் பதவிக்கு முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார், எச்.கே.பட்டீல் உள்ளிட்டோர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மாநில தலைவர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவக்குமார் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து டெல்லியில் நேற்று டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஆசைப்படவில்லை

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா இடையே உண்டாகி இருக்கும் வார்த்தை மோதல் பற்றி நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. சித்தராமையாவும், தேவேகவுடாவும் மிகப்பெரிய தலைவர்கள். அவர்கள் நிறைய பேசி இருக்கிறார்கள். அதுபற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு 14 மாதங்கள் நடந்தது. தற்போது கூட்டணி அரசு கவிழ யார்? காரணம் என்பது பற்றி பேசுவது தேவையற்றது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் எடுத்த முடிவுபடி செயல்பட்டோம்.

குமாரசாமிக்கு காங்கிரஸ் தலைவர்கள் தொல்லை கொடுத்தது தொடர்பாக விரிவாக விவாதிக்கலாம். கர்நாடக மாநில தலைவர் பதவியை கைப்பற்ற நான் முயற்சி செய்யவில்லை. மாநில தலைவர் பதவிக்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. மாநில தலைவர் பதவிக்காக டெல்லிக்கு வரவில்லை. எந்த பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வழியில் செயல்பட்டு வருகிறேன். அவர் கூறியபடி காங்கிரஸ் கட்சிக்காக நான் உழைத்து வருகிறேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story