அருண்ஜெட்லி மரணம் எதிரொலி மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்குவது தள்ளிவைப்பு அஞ்சலி செலுத்த எடியூரப்பா இன்று டெல்லி பயணம்


அருண்ஜெட்லி மரணம் எதிரொலி மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்குவது தள்ளிவைப்பு அஞ்சலி செலுத்த எடியூரப்பா இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

அருண்ஜெட்லி மரணமடைந்ததால் கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அருண்ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கிறார்.

பெங்களூரு, 

அருண்ஜெட்லி மரணமடைந்ததால் கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அருண்ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கிறார்.

இலாகா ஒதுக்குவது தள்ளிவைப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. கடந்த 20-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்பட 17 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர். ஆனால் மந்திரிகளுக்கு உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்குவது குறித்து நேற்று முன்தினம் அமித்ஷாவை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷா உத்தரவின் பேரில் நேற்று மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவும், அதற்கான பட்டியலை கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு அனுப்பி வைக்கவும் எடியூரப்பா தயாராக இருந்தார். ஆனால் நேற்று மதியம் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அருண்ஜெட்லி திடீரென மரணம் அடைந்ததால், மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்குவதை எடியூரப்பா தள்ளி வைத்துள்ளார். இதன் காரணமாக நேற்று தங்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று நினைத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

எடியூரப்பா டெல்லி பயணம்

இந்த நிலையில், அருண்ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணியளவில் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லிக்கு செல்கிறார். மதியம் 12.35 மணியளவில் அவர் டெல்லி சென்றடைகிறார். பின்னர் அருண்ஜெட்லியின் உடலுக்கு எடியூரப்பா அஞ்சலி செலுத்துகிறார். அதைதொடர்ந்து மாலை 5.35 மணியளவில் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா, இரவு 8.20 மணியளவில் பெங்களூருவுக்கு வருகிறார்.

இதனால் இன்று மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படாது என்றும், நாளை (திங்கட்கிழமை) மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story