திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அம்புஜிவள்ளி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திகணேஷ். இவருடைய மனைவி கயல்விழி (வயது 31). இவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு திருச்சியில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து கொண்டே முதுகலை மருத்துவ படிப்பும் படித்து வந்தார். திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி இருந்த கயல்விழி நேற்று முன்தினம் இரவு நீண்டநேரமாகியும் தனது அறையின் கதவை திறக்கவில்லை.

இதையடுத்து அவரது தோழி கதவை தட்டி பார்த்தார். ஆனாலும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அங்கு அறையில் கயல்விழி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, கயல்விழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது, கயல்விழிக்கு திருமணம் நடந்து ஒரு மாதமே ஆவதும், அவருடைய கணவரும் டாக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.

இந்த நிலையில் தற்கொலை செய்த டாக்டரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். டாக்டர் கயல்விழி தற்கொலை குறித்து போலீசாரிடம் விசாரித்தனர். மேலும் அவர்களிடம் கயல்விழி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் இறந்த கயல்விழி சாவில் சந்தேகம் இருக்கலாம் என கருதி வக்கீல்கள் சிலர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் பெற்றோர் தரப்பில் எந்தவித சந்தேக புகாரும் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து கயல்விழியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமணமான ஒரு மாதத்தில் கயல்விழி தற்கொலை செய்து கொண்டது குறித்து திருச்சி உதவி கலெக்டர் அன்பழகன் விசாரித்து வருகின்றார்.

Next Story