தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமைக்க ஏற்பாடு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
தென்காசி,
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பாராட்டு விழா
நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக அவருக்கும், தனி மாவட்டம் அமைக்க தீவிர முயற்சி செய்த செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தென்காசியில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று இரவு பாராட்டு விழா நடைபெற்றது.
வர்த்தக சங்க தலைவர் வி.டி.எஸ்.ஆர். முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகி பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிர்வாகிகள் எம்.ஆர். அழகராஜா, முருகன்ராஜ், பீர்முகமது, அன்பழகன், ராஜசேகர், அப்துல் அஜீஸ், கலில் ரகுமான், ஜெபராஜ் ஸ்டீபன், வர்த்தக குமாஸ்தாக்கள் சங்க நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
ஆயிரப்பேரியில்...
விழாவில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க சட்டப்பேரவையில் நான் கொடுத்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் தலைமை அலுவலகங்கள் தென்காசியில் அமைய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மேலும் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தான் தனி மாவட்டம் அமைக்கப்படும் என்று அரசு ஆணை உள்ளது.
எனவே சமீபத்தில் நான் முதல்-அமைச்சரை சந்தித்த போது அவர் இடம் தேர்வு செய்து ஆகிவிட்டதா என்று என்னிடம் கேட்டார். பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று கூறினேன். அதன்படி தற்போது தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான வரைபடத்தை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறேன். மேலும் மாவட்ட கலெக்டர் பங்களா தென்காசியில் அமையும். தொடர்ந்து மாவட்டத்திற்கான அனைத்து அரசு அலுவலகங்களும் தென்காசியில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர செயலாளர் சுடலை, மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து மற்றும் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக சங்க செயலாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story