மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை அத்துமீறி காரில் தூக்கிச் சென்றவர்களால் பரபரப்பு; டாக்டர், போலீசார் மீதும் தாக்குதல்


மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை அத்துமீறி காரில் தூக்கிச் சென்றவர்களால் பரபரப்பு; டாக்டர், போலீசார் மீதும் தாக்குதல்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இறந்தவரின் உடலை அத்துமீறி காரில் தூக்கிச் சென்றவர்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் டாக்டரும், போலீசாரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரை,

மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு நேற்று அதிகாலை 2 கார்களில் சிலர் வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று, தாங்கள் ஆரப்பாளையத்தில் இருந்து வருவதாகவும், காரில் உள்ள ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர், நோயாளியை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, காரில் இருந்த ஒருவரை உறவினர்கள் தூக்கி வந்தனர். அவரை டாக்டர் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவமனை ஊழியர்களிடம் டாக்டர் கூறியுள்ளார்.

ஆனால், உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம், நாங்கள், இறந்தவரின் உறவினர்கள்தான் எங்களிடம் உடலை தந்து விடுங்கள் என அந்த நபர்கள் கூறியுள்ளனர். அதற்கு டாக்டர் மறுத்துள்ளார். மேலும், போலீசாரிடம் அனுமதி கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே உடலை தருவதாகவும் கூறி இருக்கிறார்.

இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்ற உறவினர்கள் போலீசாரிடம் அனுமதி கடிதம் கேட்டுள்ளனர். அதற்கு போலீசார், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்புதான் உடல் ஒப்படைக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த அந்த நபர்கள், இறந்தவரின் உடலை அத்துமீறி எடுத்துக் கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனை தடுக்க முயன்ற டாக்டர் மற்றும் போலீசாரை அந்த நபர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இறந்தவரின் உடலை, அந்த நபர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் ஏற்றி தப்பிச் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த மற்றொரு கார் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து, அது யாருடையது, காரில் வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பெரிய ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story