கருவேப்பிலங்குறிச்சி அருகே, கார் மோதி துப்புரவு பணியாளர் பலி


கருவேப்பிலங்குறிச்சி அருகே, கார் மோதி துப்புரவு பணியாளர் பலி
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

கருவேப்பிலங்குறிச்சி அருகே கார் மோதி துப்புரவு பணியாளர் பலியானார். அவரது உடலை கொண்டு வந்த ஆம்புலன்சை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டிற்கு குழாய் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்கிறது. இந்த நிலையில் ரமேஷின் மனைவி அஞ்சுகம்(32), அந்த குழாயில் குடிநீரை பிடித்து, அதில் டீ போட்டு குடித்ததோடு, குடும்பத்தினருக்கும் கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் அஞ்சுகம், அவரது மகன்கள் ரெமோ(12), ரோமோ(9), ரோகித்(7), மகள் அஞ்சலி (6), அவரது உறவினரான இளங்கோவன் மகன் வீரசெல்வன், இவருடைய மகள் ஸ்ருதிகா, வேலு மனைவி சுகன்யா(32), வனிஷா(2) ஆகியோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். குடிநீர் குழாயில் மர்ம நபர்கள் விஷம் கலந்து விட்டதாக கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரமேசின் வீட்டில் உள்ள குடிநீர் குழாயை மாற்றுவதற்காக ஊராட்சி நிர்வாக துப்புரவு பணியாளர் பாண்டியன்(34), குழாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் பாண்டியன் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் டி.வி.புத்தூருக்கு ஆம்புலன்சில் நேற்று கொண்டு வரப்பட்டது. டி.வி.புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே மாலை 6 மணிக்கு வந்தபோது ஆம்புலன்சை வழிமறித்து உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மற்றும் தாசில்தார் கவியரசு விரைந்து வந்து, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், பாண்டியனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும், குடிநீர் குழாயில் விஷம் கலந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

அதற்கு தாசில்தார் கவியரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story