நீதிபதி வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்; காவலாளியை கட்டிப்போட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
கோவையில் காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு, நீதிபதி வீட்டில் நின்ற சந்தன மரத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்திச்சென்றனர்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதியில் மாநகராட்சி குடியிருப்பு உள்ளது. இங்கு மாநகராட்சி வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய பெண் நீதிபதி நந்தினி குடியிருந்து வருகிறார். அந்த வீட்டு வளாகத்தில் 5 அடி உயரத்தில் சந்தன மரம் வளர்ந்து நின்றது. நேற்று அதிகாலை 3 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டுக்குள் புகுந்தது.
அப்போது அங்கு காவலுக்கு நின்ற காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே காவலாளியை மடக்கிப்பிடித்து வாயில் துணியை திணித்து கட்டிப்போட்டனர்.
காவலாளி அருகே 2 கொள்ளையர்கள் நின்று கொண்டனர். 4 கொள்ளையர்கள் எந்திரம் மூலம் செயல்படும் ரம்பத்தினால் சந்தன மரத்தை அறுத்து பெரிய துண்டை காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.
அதன்பின்னர் காவலாளி கட்டுகளை அவிழ்த்துவிட்டு இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். ஆனால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
கடந்த சில மாதங்களாக கோவையில் சந்தன மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்திச்செல்லப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பயிற்சி மையம் அருகே, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி காந்தி என்பவரது வீட்டில் சந்தன மரத்தை வெட்டி கடத்திச்சென்றனர்.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கோவை நகரம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போலீசுக்கு சவால்விடும் வகையில், நீதிபதி நந்தினி வீட்டில் சந்தன மரத்தை மர்ம ஆசாமிகள்வெட்டி கடத்திச்சென்றது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story