தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: அரக்கோணத்தில் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பு


தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: அரக்கோணத்தில் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக அரக்கோணம் நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரக்கோணம், 

இலங்கை கடல் வழியாக 6 தீவிரவாதிகள் தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் நுழைந்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மாவட்டத்தில் 24 மணி நேரம் கண்காணிப்பு பணியை பலப்படுத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அரக்கோணம் நகரத்தில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் செல்லும் சாலைகள் மற்றும் நகரில் உள்ள ரெயில் நிலையம் செல்லும் சாலை, எஸ்.ஆர்.கேட் வழியாக செல்லும் வாகனங்களில் சோதனை செய்தனர். மேலும் அரக்கோணம் பழைய, புதிய பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கொண்டு செல்லும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அரக்கோணம் நகரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக யாராவது இருக்கிறார்களா? என்று கோப்புகளை பார்த்து ஆய்வு செய்தனர். அரக்கோணம் நகரத்தில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சோதனை செய்து வருகின்றனர்.

அரக்கோணத்தை சுற்றியுள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் 24 மணி நேரம் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரக்கோணம் தாலுகா பகுதியில் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் புதிய நபர்கள் யாராவது வந்து தங்கி உள்ளார்களா, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரக்கோணம் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் நுழைவு வாயில், டிக்கெட் கவுண்ட்டர்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், பயணிகளின் ஓய்வறை, 8 பிளாட்பாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் வைத்திருக்கும் சூட்கேஸ்கள், பைகளில் சோதனை செய்து வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story