வேடசந்தூர் அருகே டயர் வெடித்து கவிழ்ந்த சரக்கு வேன் - துக்க வீட்டுக்கு சென்ற 30 பேர் காயம்


வேடசந்தூர் அருகே டயர் வெடித்து கவிழ்ந்த சரக்கு வேன் - துக்க வீட்டுக்கு சென்ற 30 பேர் காயம்
x
தினத்தந்தி 25 Aug 2019 3:15 AM IST (Updated: 25 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே டயர் வெடித்து சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்தனர்.

வேடசந்தூர்,

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கல்லுப்பட்டியில் ஒருவர் இறந்ததையடுத்து, வேடசந்தூரை அடுத்த ஒசபாளையத்தை சேர்ந்த அவருடைய உறவினர்கள் 30 பேர் சரக்கு வேனில் கல்லுப்பட்டிக்கு புறப்பட்டனர். சரக்கு வேனை, வினோத்குமார் (வயது 26) ஓட்டினார். கல்வார்பட்டி- குரும்பபட்டி மலைப்பாதையில் தர்மகிணறு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென சரக்கு வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மலைப்பாதையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்த மாரியப்பன் (47), வேலன் (55), வேல்முருகன் (37), செல்வக்குமார் (37), செல்வி (42), மோனிகா (14), இலக்கியா (13), சரக்கு வேன் டிரைவர் வினோத்குமார் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக் காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து நடந்த இடம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லையா? அல்லது வேடசந்தூர் போலீஸ் நிலைய எல்லையா? என்ற பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு குட்டம் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு விபத்து நடந்த இடம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உள்பட்டது என்றனர்.

இதனையடுத்து விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் களை வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

Next Story