ஓசூர் அருகே சுற்றித்திரியும் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் போராட்டம்


ஓசூர் அருகே சுற்றித்திரியும் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:30 AM IST (Updated: 25 Aug 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே சுற்றித் திரியும் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 2-வது நாளாக வனத்துறையினர் போராடினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியிலும், பாகலூர் அருகே லிங்காபுரம், விநாயகபுரம், சிங்கசாதனபள்ளி ஆகிய பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவைகள் அவ்வப்போது கிராமங் களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக முதுமலை டாப்சிலிப் பகுதியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியப்பன், பரணி என்ற 2 கும்கி யானைகள் ஓசூருக்கு வரவழைக்கப்பட்டன.

மேலும், ஓசூர் அருகே கதிரேபள்ளி என்ற இடத்தில் உள்ள லேஅவுட் பகுதியில் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்பகுதியில் மழை பெய்ததாலும், பல்வேறு காரணங்களாலும் கடந்த 4 நாட்களாக காட்டு யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்த திடீரென முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கின. வனத்துறை டாக்டர்கள், அதிகாரிகள் மேற்பார்வையில் 60-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், பெங்களூருவில் இருந்து வந்த மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்களும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அந்த 2 யானைகளும் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதும், மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தன. இதனால் 7 முறை நிபுணர்கள் மயக்க ஊசி செலுத்தியும், அவை குறி தப்பின. மேலும் மாலையில் மழை பெய்ததாலும், இருள் சூழ தொடங்கியதாலும் இந்த பணி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், 2 காட்டு யானைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தும் பணி, 2-வது நாளாக நேற்று அதிகாலையில் மீண்டும் தொடங்கியது. இதையொட்டி, வனத்துறை டாக்டர்கள், மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் தீவிர பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை வனத்துறையினர் போராடியும், அந்த 2 காட்டு யானைகளும், வெளியே வராமல், காட்டில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதன் காரணமாக நேற்றும் அந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்த முடியவில்லை. எனவே, மீண்டும் நாளை(திங்கட்கிழமை) இந்த ஆபரேசனை தொடர வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.





Next Story