நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை தொழிலாளி தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தொழிலாளி தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
நெல்லை,
தொழிலாளி தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
முற்றுகை போராட்டம்
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா ரவணசமுத்திரத்தை அடுத்த மந்தியூரை சேர்ந்த பொதுமக்கள் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள், போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மந்தியூர் வடக்கு தெருவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 17-ந் தேதி இறந்து விட்டார். இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் பட்டாசு வெடித்து சென்றார்கள். அதில் ஒரு துகள் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மீது பட்டுவிட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவர் இச்சம்பவத்துக்கு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மணிகண்டன் (வயது 18) என்பவர் தான் காரணம் என்று நினைத்தார். அவரை பலர் முன்பு அவதூறாக பேசி, கம்பால் தாக்கியுள்ளார். இதனால் அவமானம் தாங்காமல் மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மணிகண்டன் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story