தஞ்சை பெரிய கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு சாதாரண உடை அணிந்து போலீசார் கண்காணிப்பு


தஞ்சை பெரிய கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு சாதாரண உடை அணிந்து போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 8:40 PM GMT)

தஞ்சை பெரிய கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாதாரண உடை அணிந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் வழக்கமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இது தவிர இங்குள்ள ராஜராஜன் கோபுர வாசலில் நிரந்தரமாக ‘மெட்டல் டிடெக்டர்’ வாசலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தீவிரவாதிகள் ஊடுருவல்

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க திட்டமிட்டு தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று 2-வது நாளாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பக்தர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதித்தனர். நேற்று பெரிய கோவிலில் வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே சாதாரண உடை அணிந்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story