பிவண்டியில் மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க சென்ற 2 பேர் பலி
பிவண்டியில் மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
தானே,
பிவண்டியில் மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. கட்டிடத்தில் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை எடுக்க சென்ற 2 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டிடத்துக்கு சீல்
தானே மாவட்டம் பிவண்டி, சாந்திநகர் பிரானிபாடா பகுதியில் உள்ள ஒரு 4 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மேற்பூச்சு இடிந்து விழுந்தது. மேலும் விரிசல்கள் விழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த பிவண்டி - நிசாம்புரா மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்த 22 குடும்பத்தினரை வெளியேற்றினர். அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.
இடிந்து விழுந்தது
இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க சிலர் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்துக்குள் நுழைந்து உள்ளனர். அந்த நேரத்தில் துரதிருஷ்டவசமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்த பயங்கர சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் பதறி அடித்து எழுந்தனர். இந்தநிலையில் கட்டிடத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் உதவி கேட்டு கதறி அழுதனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
2 பேர் பலி
இதில் சிராஜ் அன்வர் அன்சாரி (வயது26), சபிக் சேக் (22) ஆகிய வாலிபர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். படுகாயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காலை 9 மணியளவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி முடிந்தது.
இந்த சம்பவம் குறித்து பிவண்டி நிசாம்புரா மாநகராட்சி கமிஷனர் அசோக் ரன்காம்ப் கூறியதாவது:-
“கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்ட தகவல் தெரிந்தவுடன் அதில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டோம். எனினும் நள்ளிரவு நேரத்தில் சிலர் கட்டிடத்தில் நுழைந்த நேரத்தில் அது இடிந்து விழுந்து உள்ளது. இடிந்து விழுந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது.
அந்த கட்டிடத்துக்கு பெயர் எதுவும் கிடையாது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த கட்டிடத்தை கட்டிய கட்டுமான அதிபர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்”.
இவ்வாறு அவர் கூறினார்.
10 ஆண்டுகளே ஆன கட்டிடம்
இடிந்து விழுந்து 2 பேரின் உயிரை பலிவாங்கிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளே ஆனதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் உல்லாஸ் நகரில் அபாயகரமான நிலையில் இருந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. எனினும் கட்டிடம் இடிந்து விழுவதற்கு முந்தைய நாள் அதில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பிவண்டியில் அதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டாலும் 2 பேர் பலியாகி விட்டனர்.
Related Tags :
Next Story