தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம்


தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 5:12 PM GMT)

தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 13-வது மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயலாளர்கள் பன்னீர் செல்வம், சவுந்தரராஜன் ஆகியோர் பேசினர். மாநாட்டில் ஒரே நாடு, ஒரே சாதி என்ற தலைப்பில் கவிஞர் முத்துநிலவன் பேசினார். மாநாட்டில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய மாற்று நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். புதுக்கோட்டை அருகே திருப்பூரில் ரெயில்வே மேம்பாலம் கட்டித் தர வேண்டும். ஆலங்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்கத்தின் பலர் கலந்து கொண்டனர். 

Next Story