நான் முதல்-மந்திரியாக இருந்தது பிடிக்கவில்லை கூட்டணி ஆட்சியை கலைக்க சதி செய்தார் சித்தராமையா மீது குமாரசாமி குற்றச்சாட்டு
நான் முதல்-மந்திரியாக இருந்தது பிடிக்காததால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார் என்று சித்தராமையா மீது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கடந்த மாதம்(ஜூலை) கவிழ்ந்தது.
சித்தராமையா- தேவேகவுடா மோதல்
இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில் கூட்டணி அரசு கவிழ யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
அதாவது கூட்டணி ஆட்சி கவிழ சித்த ராமையா தான் காரணம் என்று தேவேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இதற்கு பதிலளித்த சித்தராமையா, கூட்டணி அரசு கவிழ தேவேகவுடா மற்றும் அவரது மகன்களான குமாரசாமி, ரேவண்ணா ஆகியோர் தான் காரணம் என்று கூறினார். இதனால் சித்தராமையா மற்றும் தேவேகவுடா இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மதசார்பற்ற சக்திகள் ஒன்றாக செயல்பட வேண்டிய தேவை இருக்கும் நிலையில் சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு உரிய தருணத்தில் பதிலளிப்பேன் என்று கூறினார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, ஒரு ‘ஆன்-லைன்‘ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
சித்தராமையாவே காரணம்
சித்தராமையா தான் எனது முதல் எதிரி. நான் முதல்-மந்திரி ஆனது அவருக்கு பிடிக்கவில்லை. அவரால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூட்டணி அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டிவிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கு சித்தராமையாவே நேரடி காரணம்.
கூட்டணி நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. ஆனால் இது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எடுத்த சில முடிவுகளை அவரால் ஏற்க முடியவில்லை. அதனால் கூட்டணி அரசை கவிழ்க்க அவர் தொடர்ந்து சதி செய்து வந்தார்.
மரியாதை கொடுக்கவில்லை
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கும் சித்தராமையாவே காரணம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருந்தபோதும், அதை சித்தராமையா அனுமதிக்கவில்லை. என்னை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க சித்தராமையா விரும்பினார்.
நான் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்த நாள் முதலே, எனக்கு எதிராக அவர் கத்தியை கூர்தீட்டும் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் மேலிடத்தின் பேச்சுக்கும், சித்த ராமையா மரியாதை கொடுக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருக்கவில்லை, கிளார்க்கை போல் பணியாற்றினேன். சித்தராமையா, தான் மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் இவ்வளவு குழப்பங்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
காங்கிரஸ் மீது தேவே கவுடா, குமாரசாமி ஆகியோர் தொடர்ந்து குற்றம்சாட்டி பேசி வருகிறார்கள். அதற்கு சித்தராமையா மட்டுமே பதிலளித்துள்ளார். இந்த மோதலை காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து கருத்து கேட்டபோது, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், கருத்து கூற மறுத்துவிட்டார்.
கூட்டணி முறிவு?
கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது முதல் தேவேகவுடா, சித்தராமையா இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது. இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இதனால் இனி காங்கிரசுடன் கூட்டணி வைப்பது வேண்டுமென்றால், அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி கூறினால் மட்டுமே சாத்தியம் என்று தேவேகவுடா கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் நடந்தால் தனித்து போட்டியிட ஜனதாதளம்(எஸ்) கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி விரைவில் முறிந்துவிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
Related Tags :
Next Story