மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா?


மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா?
x
தினத்தந்தி 26 Aug 2019 12:15 AM GMT (Updated: 25 Aug 2019 6:39 PM GMT)

மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சீருடையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சீருடையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் அதிகாரி யாரும் நெருக்கடி கொடுத்ததால் அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டாரா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 47). மதுரை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு பாலவசந்தி என்ற மனைவியும், நாகசுமித்ரா, நாகஸ்ரீ என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

மகள்கள் இருவரும் கல்லூரி, பள்ளியில் படித்து வருகின்றனர். மதுரை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் நாகராஜ் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பாலவசந்தியும், மகள்களும் உறவினர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர். நாகராஜ் காலையில் வேலைக்கு சென்று விட்டு, மதியம் 2 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சீருடையிலேயே தனது அறைக்கு சென்று, உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையே பாலவசந்தி, கணவர் நாகராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. பலமுறை முயற்சித்தும் அவர் செல்போனை எடுக்காததால், சந்தேகம் அடைந்த பாலவசந்தி, அக்கம் பக்கத்து வீட்டினரை தொடர்பு கொண்டு அதுபற்றி கூறி இருக்கிறார். தனது வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அருகில் உள்ளவர்கள் நாகராஜின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த மின்விசிறியில், சீருடையிலேயே நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்டது ஆயுதப்படை குடியிருப்புகளில் வசித்து வருபவர்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

நாகராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் தலைமை காவலராக இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்ப பிரச்சினையா? கடன் பிரச்சினையில் இறந்தாரா? வேலைக்கு சென்று வீடு திரும்பியவுடன் இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததால் உயர் அதிகாரி யாரும் அவருக்கு நெருக்கடி கொடுத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story