தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ராஜஸ்தான் வாலிபர் பலி


தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ராஜஸ்தான் வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 Aug 2019 11:15 PM GMT (Updated: 25 Aug 2019 6:57 PM GMT)

தாராபுரம் அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் பலியானார்.

தாராபுரம்,

ராஜஸ்தான் மாநிலம், பிக்காநேர் மாவட்டம் பாஞ்சூபரை சேர்ந்தவர் பருபராம். இவரது மகன் தீபாராம் (வயது 22). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், இவரது உறவினர் ஒருவர் நடத்திவரும் கண்ணாடி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று கடைக்கு விடுமுறை என்பதால் இவர், இங்குள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சில நண்பர்களுடன் சேர்ந்து, புறவழிச்சாலையில் உள்ள புதிய ஆற்றுப்பாலத்தின் கீழ், அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். தீபாராமுக்கும் அவரது நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாது. அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து இல்லை. இருப்பினும் இங்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆற்றின் நடுவே தூண்கள் கட்டுவதற்காக, ஆற்றில் பல இடங்களில் பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேவைக்காகவும் குழிகள் வெட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்திற்காக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது, இந்த குழிகளில் தண்ணீர் தேங்கிவிட்டது. தண்ணீர் நிரம்பி இருப்பதால், குழிகளின் ஆழம் தெரியவதில்லை. குறிப்பாக புதிதாக ஆற்றில் குளிக்க செல்பவர்களுக்கு, அந்த பகுதியில் உள்ள குழிகள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. தீபாராமும், அவரது நண்பர்களும் அந்த பகுதிக்குத்தான் குளிப்பதற்கு சென்றுள்ளனர். நண்பர்கள் அனைவரும் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் ஒரு ஓரமாக குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தீபாராம் குழியில் இறங்கிவிட்டார். நீச்சல் தெரியாத தீபாராம் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தவாறு “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்” என்று கூச்சல் போட்டுள்ளார். அப்போது அருகே குளித்துக் கொண்டிருந்த சிலர், ஓடிச்சென்று தண்ணீரில் குதித்து தீபாராமை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அதற்குள் தீபாராம் தண்ணீருக்குள் மூழ்கி விட்டார்.

இது குறித்து உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் ராஜாஜெயசிம்மராவ் தலைமையில் விரைந்து சென்று, தண்ணீரில் இறங்கி தீபாராமை தேடினார்கள். தொடர்ந்து 3 மணி நேர தேடலுக்கு பிறகு தீபாராமின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story