கடலூரில், 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை 13,362 பேர் எழுதினர் - டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பார்வையிட்டார்


கடலூரில், 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை 13,362 பேர் எழுதினர் - டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 7:08 PM GMT)

கடலூரில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 13,362 பேர் எழுதினர். இதை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்,

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் தமிழ்நாடு காவல்துறை 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணிக்கான எழுத்துதேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 240 ஆண்கள், 2 ஆயிரத்து 494 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 15 ஆயிரத்து 736 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக கடலூரில் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி, சொரக்கல்பட்டு செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி, கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதாடு கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவித்திருந்தாலும் காலை 8 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்று அ றிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே வந்து, தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக தங்களுக்குரிய ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை கொண்டு வந்தனர்.

மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால், தேர்வு மைய நுழைவு வாசலிலேயே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தேர்வு எழுத சென்றவர்களிடம் இருந்து செல்போனை வாங்கிக்கொண்டனர். அதனை, அவர்களின் தேர்வு மைய எண்ணை குறித்து வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். பின்னர் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைக்கப் பட்டனர்.

அதன்பிறகு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் 10.15 மணி வரையிலும் காலதாமதமாக வந்தவர்களை போலீசார் தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு காலை 11.20 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 2 திருநங்கைகள் உள்பட 13 ஆயிரத்து 362 பேர் எழுதினர். இதில் கோர்ட்டு உத்தரவுபடி ஒருவர் தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆயிரத்து 376 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதற்கிடையில் தேர்வு மையங்களை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர்வில் யாரேனும் முறைகேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பதையும் தீவிரமாக கண்காணித்தனர். இது தவிர அறை கண்காணிப்பாளர்களும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்வு மையத்துக்குள் தேர்வர்களை தவிர வேறு யாரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த தேர்வர்கள், வினாத்தாள் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர்.

தேர்வு முடிந்ததும் அனைவரும் ஓரே நேரத்தில் வெளியே வந்ததால் கடலூர் பாரதி சாலையில் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story