மாவட்டத்தில், 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை 17,125 பேர் எழுதினர் - போலீஸ் ஐ.ஜி.கணேசமூர்த்தி பார்வையிட்டார்


மாவட்டத்தில், 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை 17,125 பேர் எழுதினர் - போலீஸ் ஐ.ஜி.கணேசமூர்த்தி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 26 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 17,125 பேர் எழுதினர். தேர்வை போலீஸ் ஐ.ஜி.கணேசமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம்,

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் தமிழ்நாடு காவல்துறை 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 274 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராம கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி, தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக போலீஸ் ஐ.ஜி. (பொது) கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவித்திருந்தாலும் காலை 8 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே வந்து, தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக தங்களுக்குரிய ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை கொண்டு வந்தனர்.

மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால், தேர்வு மைய நுழைவு வாசலிலேயே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தேர்வு எழுத வந்தவர்களிடம் இருந்து செல்போனை வாங்கிக்கொண்டனர். அதன் பிறகு அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்பிறகு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் 10.15 மணி வரையிலும் காலதாமதமாக வந்தவர்களை போலீசார் தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு காலை 11.20 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 17 ஆயிரத்து 125 பேர் எழுதினர். 3 ஆயிரத்து 149 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கிடையில் தேர்வு மையங்களை போலீஸ் ஐ.ஜி. கணேசமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர்வில் யாரேனும் முறைகேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பதையும் தீவிரமாக கண்காணித்தனர். இது தவிர அறை கண்காணிப்பாளர்களும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்வு மையத்துக்குள் தேர்வர்களை தவிர வேறு யாரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. 

Next Story