தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ; அமைச்சர் கே.பி.அன்பழகன் மனுக்களை பெற்றார்


தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ; அமைச்சர் கே.பி.அன்பழகன் மனுக்களை பெற்றார்
x
தினத்தந்தி 26 Aug 2019 5:00 AM IST (Updated: 26 Aug 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தர்மபுரி,

தமிழக முதல்-அமைச்சரின் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று தர்மபுரி அப்பாவு நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, நல்லம்பள்ளி தாலுகா பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி, தர்மபுரி ஒன்றியம் செட்டிக்கரை, பென்னாகரம் ஒன்றியம் அஞ்சேஅள்ளி ஆகிய இடங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாம்களுக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்டவருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர்கள் சிவன்அருள், புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாம்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய தீர்வு காண உத்தரவிட்டார்.

தர்மபுரி நகராட்சி அப்பாவு நகர் பகுதியில் நடைபெற்ற முகாமில் அமைச்சரிடம் கழிவுநீர் கால்வாய் வசதி, தெருவிளக்கு வசதி, கால்வாய்களை தூர்வாரி சீரமைத்தல், திருட்டு சம்பவங்களை தடுக்க காவல்துறை மூலம் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க கோருதல், தரமான சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதேபோன்று ஈச்சம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பசுமை வீடுகள் கட்டித்தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அமைச்சரிடம் வழங்கினார்கள். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் சவுகத்அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், அருள்மொழித்தேவன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர்கள் வளர்மதி, ராமசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர் பெரியண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூக்கடை முனுசாமி உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story