நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை 3 பேர் கைது


நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 3:00 AM IST (Updated: 26 Aug 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

மஸ்கி தாலுகாவில், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

ராய்ச்சூர், 

மஸ்கி தாலுகாவில், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

விவசாயி

ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா ரங்காபூரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவருத்ரப்பா(வயது 65). விவசாயி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகிலேயே அமரேஷ் என்பவருக்கு சொந்தமான நிலமும் அமைந்துள்ளது. இதன்காரணமாக சிவருத்ரப்பாவுக்கும், அமரேசுக்கும் இடையே அடிக்கடி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் சிவருத்ரப்பாவுக்கும், அமரேசுக்கும் இடையே நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அமரேஷ், தனது கூட்டாளிகள் 8 பேருடன் சேர்ந்து சிவருத்ரப்பாவை சரமாரியாக தாக்கினார். மேலும் தகராறை தடுக்க வந்த சிவருத்ரப்பாவின் மகன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அரிவாளால் சிவருத்ரப்பாவையும், அவருடைய மகனையும் அமரேஷ் தரப்பினர் வெட்டினர்.

படுகொலை

இதில் அவர்கள் 2 பேரும் பலத்த வெட்டுக்காயம் அடைந்தனர். இதையடுத்து அமரேஷ் உள்பட 9 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து சிவருத்ரப்பாவையும், அவருடைய மகனையும் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவருத்ரப்பா பலியானார். அவருடைய மகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் குறித்து பலகானூரு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக சிவருத்ரப்பாவை, அமரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த அமரேசையும், அவருடைய கூட்டாளிகள் 2 பேரையும் என மொத்தம் 3 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story