அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் பேட்டி


அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2019 3:00 AM IST (Updated: 26 Aug 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் கூறினார்.

தூத்துக்குடி, 

அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் கூறினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடஒதுக்கீடு

தி.மு.க. ஆட்சியில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். இதனை 6 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். அதே போன்று எஸ்.சி, எஸ்.டிக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசியலிலும் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இருப்பதை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு முன்மொழிந்து உள்ள தேசிய கல்விக் கொள்கை, வரைவு அறிக்கை ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அடிப்படையில் உள்ளது. முதலாளிகளுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சாதகமாக உள்ளது. ஆகையால் இந்த கல்வி கொள்கை வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவ படுகொலைகள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் நடக்கிறது என்று மனித உரிமை ஆணையம் கூறி உள்ளது. இந்த படுகொலைகளை தடுப்பதற்கு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். மனித கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்கும் வகையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம்(செப்டம்பர்) முழுவதும் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, தென்மண்டல செயலாளர் மனோகர், மாநில துணை பொதுச் செயலாளர் கண்ணன், மாநில அமைப்பாளர் திலீபன், மாநில இளைஞர் அணி செயலாளர் சண்முகவேல், தலைமை நிலைய செயலாளர் குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வேலன், மாவட்ட தலைவர் பெரியசாமி, துணை செயலாளர்கள் சித்திரைவேல், ஜான், அமைப்பு செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story