சேலத்தில் ஓடும்பஸ்சில், மூதாட்டியிடம் ரூ.1½ லட்சம் அபேஸ்


சேலத்தில் ஓடும்பஸ்சில், மூதாட்டியிடம் ரூ.1½ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 26 Aug 2019 3:15 AM IST (Updated: 26 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், ஓடும்பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1½ லட்சம் அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரம் 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பிரபாவதி (வயது 67). கணவன், மனைவி இருவரும் சம்பவத்தன்று பெங்களூருவில் இருந்து சேலம் அம்மாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல ரெயிலில் வந்தனர்.

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவர்கள் அங்கிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். பஸ் நிலையம் அருகே பஸ் வந்த போது பிரபாவதி வைத்து இருந்த ‘பை’ திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் பையை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் பதறி போன கணவன், மனைவி இருவரும் பஸ் இருக்கையில் தேடி பார்த்தனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பிரபாவதி பள்ளப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும்பஸ்சில் மூதாட்டியிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story