மத்திய குழுவினர் பெலகாவியில் ஆய்வு மழை வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்தனர்


மத்திய குழுவினர் பெலகாவியில் ஆய்வு மழை வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்தனர்
x
தினத்தந்தி 26 Aug 2019 3:00 AM IST (Updated: 26 Aug 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவிக்கு வந்த மத்திய குழுவினர், அங்கு ஆய்வு செய்து, மழை வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்தனர்.

பெங்களூரு, 

பெலகாவிக்கு வந்த மத்திய குழுவினர், அங்கு ஆய்வு செய்து, மழை வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்தனர்.

மதிப்பீடு செய்யும் பணி

வட கர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, வெள்ளம் உண்டானது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மழைக்கு சுமார் 90 பேர் மரணம் அடைந்துள்ளனர். வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசிடம் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் கர்நாடகம் வந்த அந்த குழுவினர், முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து நேற்று மத்திய குழுவினர் பெலகாவிக்கு சென்று அங்கு வெள்ள சேதங்களை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும் பணியை தொடங்கினர். முதல்கட்டமாக மத்திய உள்துறை இணை செயலாளர் பிரகாஷ் தலைமையில் 6 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நிவாரண முகாம்கள்

குறிப்பாக சிக்கோடி, மாஞ்ரி, அங்கலி, காகவாடா, ஹாரோகேரி, ராயபாக், குர்லாப்புரா, கோகாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்த குழுவினர் சென்று சேதங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் பாலம் உடைந்தது, மின் கம்பங்கள், வீடுகள் சேதம் அடைந்தது, பயிர்கள் நாசம் அடைந்தது குறித்து விவரங்களை சேகரித்தனர்.

கோகாக் நகரில் சேதம் அடைந்துள்ள வணிக கட்டிடங்களின் விவரங்களையும் கேட்டு பெற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் நிவாரண முகாம்களுக்கு அதிகாரிகள் சென்றும், மக்களுடன் கலந்துரையாடினர். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களின் வீடுகள் சேதம் அடைந்துவிட்டதாகவும், அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக பெலகாவி விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் எஸ்.பி.பொம்மனஹள்ளி மற்றும் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

Next Story