கோவையில் தற்போது நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


கோவையில் தற்போது நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 11:48 PM GMT)

கோவையில் தற்போது நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

கோவை, 

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். பின்னர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் கூறியதாவது:-

தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக கோவைக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறப்படுவதால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் நிலவுகிறது. கோவை மக்கள் மத நல்லிணக்கத்தோடும், ஒற்றுமையோடும் பழகி வருகின்றனர். இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்திகள் பரவுகின்றன.

மத்திய அரசு சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் நாட்டில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. முத்தலாக் மசோதா, உபா சட்ட திருத்தம், என்.ஐ.ஏ. அமைப்பிற்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரம் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் இருந்து மறக்கடிக்கும் விதமாக இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு முன்பும் பல்வேறு பெயர்களில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எல்லாம் பிடிக்கப்பட்டு விட்டனரா? தற்போது அவர்கள் பெயரில் ஏன் மிரட்டல் வருவது இல்லையே. அரசுக்கு இக்கட்டான சூழல் ஏற்படும்போது மட்டும் ஏன் இத்தகைய ஊடுருவல் நடக்கிறது. எனவே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவை மாவட் டத்தில் தற்போது நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் போலீஸ் கமிஷனர் சுமித் சரணிடம் மனு அளிக்கப்பட்டது.


Next Story