பந்தலூரில், செந்நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு - பொதுமக்கள் பீதி


பந்தலூரில், செந்நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 26 Aug 2019 3:30 AM IST (Updated: 26 Aug 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் செந்நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. காட்டுயானைகள் விவசாய பயிர்கள், பொதுமக்களின் வீடுகளை சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. சில சமயங்களில் பொதுமக்களை தாக்கி கொன்று வருகின்றன. இதேபோல் சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை கடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்று விடுகின்றன. மேலும் மாடுகள், ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன.

காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பந்தலூர் அருகே இரும்பு பாலம் பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேலும் இரவில் ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை செந்நாய்கள் கடித்து கொன்று அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு தனியார் தேயிலை தோட்டத்துக்குள் செந்நாய்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் தோட்டங்களை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சரவணன், வன காப்பாளர் லூயீஸ் உள்ளிட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டுயானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள் தான் தேயிலை தோட்டங்களுக்குள் காணப்படும். தற்போது செந்நாய்கள் கூட்டம் தென்படுகிறது. வனவிலங்குகள் வருகையால் தேயிலை தோட்டங்கள் வனப்பகுதியாக மாறி விடும் நிலையில் உள்ளது. மேலும் உயிருக்கு அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story