மொடக்குறிச்சி அருகே துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


மொடக்குறிச்சி அருகே துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 Aug 2019 3:45 AM IST (Updated: 26 Aug 2019 9:01 PM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி கோவிந்தநாயக்கன்பாளையத்தில் எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பின்னர் இரவு 7 மணி அளவில் கோவில் பூஜையை முடித்துவிட்டு பூசாரி கதவை பூட்டிவிட்டு சென்றுவிடுவார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த வழியாக சென்ற சிலர் கோவில் நுழைவு வாயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்தனர். உடனே இதுபற்றி பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு வந்து கோவில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை காணவில்லை. உண்டியல் மட்டும் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது.

இதனால் உண்டியலை அனைவரும் தேடிப்பார்த்தனர். அது கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏரிக்கரையோரம் வீசப்பட்டு கிடந்தது. அதன் அருகே மதுபாட்டில்களும் கிடந்தது. இதுபற்றி பூசாரி உடனே மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கோவிலை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் கதவை உடைத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை கடப்பாரையால் நெம்பி பெயர்த்து எடுத்துள்ளார்கள். அதைத்தொடர்ந்து உண்டியலை தூக்கிச்சென்று ஏரி பகுதிக்கு வந்து பணத்தை எடுத்துள்ளனர். மேலும் ஜாலியாக அமர்ந்து மதுவும் அருந்தியுள்ளனர். பின்னர் காலி உண்டியலை காட்டுப்பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது தெரிய வந்தது. உண்டியலில் பணம் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story