திருப்பூரில் அரிசி மண்டி பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை


திருப்பூரில் அரிசி மண்டி பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 27 Aug 2019 4:45 AM IST (Updated: 26 Aug 2019 8:58 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அரிசி மண்டியின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 36). இவர் அதே பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக அரிசி மண்டி நடத்தி வருகிறார். அரிசி மண்டியின் மேல்தளத்தில் சண்முகம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரிசி மண்டி ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் நேற்று காலை கடையை திறக்க கடையின் உரிமையாளர் சண்முகம் சென்றார். அப்போது கடையின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கடையில் இருந்த மேஜை டிராயர் திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த ரூ.8 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் சண்முகம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சம்பவத்தன்று நள்ளிரவு சண்முகத்தின் அரிசி மண்டிக்கு சென்ற மர்ம ஆசாமிகள், அரிசி மண்டியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை வேறு பக்கமாக திருப்பி வைத்து விட்டு, கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.8 லட்சத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டுடிஸ்க், கணினி ஆகியவற்றையும் அந்த ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். இதையடுத்து கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1 மாதத்தில் மட்டும் போயம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story