ஜெயங்கொண்டத்தில் அரசு பஸ் மீது கல் வீசிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


ஜெயங்கொண்டத்தில் அரசு பஸ் மீது கல் வீசிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 11:00 PM GMT (Updated: 26 Aug 2019 4:55 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் அரசு பஸ் மீது கல்வீசிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்,

சிதம்பரத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூரை நோக்கி ஒரு அரசு பஸ் பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்டது. அந்த பஸ்சை ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். ஜெயங்கொண்டம் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன்(48) கண்டக்டராக பணிபுரிந்தார்.

இந்த பஸ் காலை 11.30 மணியளவில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சில பயணிகளை இறக்கி விட்டு, அண்ணா சிலை அருகே உள்ள சாலையில் ஒரு திருப்பத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அந்த பஸ்சை வழிமறித்து, கண்ணாடி மீது சாலையோரம் கிடந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தவாறு, பஸ்சை விட்டு இறங்கி நாலாபுறமும் சிதறி ஓடினர். கற்கள் வீசியதில் பஸ்சின் முன்பக்கம், பின்பக்கம் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

3 பேர் கைது

அப்போது அந்த கும்பல் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பஸ்சை அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பஸ்சில் இருந்த பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் பகுதியிலும், அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்து டிரைவர் அருணாச்சலம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 2 சிறுவர்கள், ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் ரோட்டு தெருவைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் அருண்குமார் (வயது 22) உள்பட 5 பேர் அரசு பஸ்சின் மீது கற்களை வீசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 சிறுவர்கள், அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story