தாமதமாக பணிக்கு வந்ததால் கண்டிப்பு, விஷம் குடித்த அரசு பஸ் கண்டக்டர் சாவு - உறவினர்கள் சாலை மறியல்
பழனியில், தாமதமாக பணிக்கு வந்ததை கண்டித்ததால் விஷம் குடித்த அரசு பஸ் கண்டக்டர் நேற்று இறந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
பழனி,
பழனி அருகே வில்வாதம்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 28). இவர், பழனி-குமரலிங்கம் இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். கடந்த 21-ந்தேதி பணிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக ராதாகிருஷ்ணனை, போக்குவரத்து அதிகாரிகள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அதிகாரிகள் கண்டித்ததால் தான் ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து இறந்தார் என்றும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடைய உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும் ராதாகிருஷ்ணனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு, அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் பழனி அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள், திடீரென மருத்துவமனை முன்பு திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதையடுத்து பழனி சப்-கலெக்டர் உமா, தாசில்தார் பழனிச்சாமி ஆகியோரும் அரசு மருத்துவமனைக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story