ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 4-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 4-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Aug 2019 3:30 AM IST (Updated: 26 Aug 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து 4-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழக அரசு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் 6 பேர் கடந்த 23-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகளும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாகவும், அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ரமா(வயது 46), நாச்சியப்பன்(33) ஆகிய 2 டாக்டர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மயக்கமடைந்த 2 டாக்டர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று டாக்டர்கள் சங்கத்தினர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது போராட்டத்துக்கு ஆதரவு கேட்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் டாக்டர்கள் போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Next Story