கிருஷ்ணகிரியில், பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்


கிருஷ்ணகிரியில், பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Aug 2019 3:45 AM IST (Updated: 26 Aug 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, பட்டா, கல்வி உதவித் தொகை, ஓய்வூதிய தொகை, இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 318 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து 4 பேருக்கு கல்வி உதவித் தொகை, குடும்ப வாழ்வாதார நிதி உதவி, முதல் பிரசவத்திற்கு மருத்துவ நிதி உதவி தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரத்திற்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், வருவாய் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்த மலையாண்டஅள்ளியைச் சேர்ந்த மணிவண்ணன், பணிக்காலத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது வாரிசுதாரரான கண்ணன் என்பவருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையையும், தொழிலாளர் நலத்துறை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில் 74 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story