அடையாறு பகுதியில் விநாயகர் சிலை அமைக்க ஒற்றை சாளர முறையில் அனுமதி போலீசாருக்கு சிலை அமைப்பாளர்கள் நன்றி


அடையாறு பகுதியில் விநாயகர் சிலை அமைக்க ஒற்றை சாளர முறையில் அனுமதி போலீசாருக்கு சிலை அமைப்பாளர்கள் நன்றி
x
தினத்தந்தி 27 Aug 2019 4:00 AM IST (Updated: 26 Aug 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறு காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு சிலை அமைப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

அடையாறு,

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் மூலம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாறு சிலை வைப்பதற்கு ஒவ்வொரு சிலை அமைப்பாளரும் மின்சாரத்துறை, மாநகராட்சி, தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் அனுமதி பெற வேண்டும். இதையடுத்தே சிலை வைப்பதற்கான அனுமதி அளிக்கப்படும்.

இந்த நடைமுறையால் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே அனுமதி பெற செல்வதில் அலைச்சல், நேர விரயம் ஏற்படுவதாக சிலை அமைப்பாளர்கள் கூறி இருந்தனர்.

ஒற்றை சாளர முறையில் அனுமதி

இதையடுத்து இந்த வருடம் விநாயகர் சிலை அமைப்பாளர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு, அடையாறு காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை, தரமணி, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கு இந்த 4 துறையினரின் அனுமதியையும் ஒற்றை சாளர முறையில் ஒரே இடத்தில் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அடையாறு துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பலவேசம், கிறிஸ்டின் ஜெயசீல், மனோகர் மற்றும் போலீசார் இந்த ஏற்பாட்டை செய்தனர்.

போலீசாருக்கு நன்றி

இதில் மின்சாரத் துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பெசன்ட் நகர் எம்.ஜி.சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சம்பந்தபட்ட துறைகளின் அனுமதியை ஒரே இடத்தில் பெற்று பயனடைந்தனர்.

போலீசாரின் சிறப்பான இந்த ஏற்பாட்டால் தாங்கள் மிகவும் பயனடைந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story