ஈரோடு திருநகர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்: பல்வேறு அமைப்பு -கட்சியினர் கலெக்டரிடம் மனு


ஈரோடு திருநகர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்: பல்வேறு அமைப்பு -கட்சியினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Aug 2019 11:00 PM GMT (Updated: 26 Aug 2019 6:45 PM GMT)

ஈரோடு திருநகர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

ஈரோடு சூரம்பட்டி மாரப்பா வீதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சி.கதிரவனிடம் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில், ‘எங்கள் பகுதியில் 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மருத்துவமனை, சிறு, குறு வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் எங்கள் பகுதியில், அலுமினிய குழாய்களுக்கு ரசாயன கலவையை பயன்படுத்தி முலாம் பூசும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் சாக்கடை கால்வாயில் திறந்து விடப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் புகைபோக்கி மூலம் நச்சுப்புகை காற்றில் கலப்பதால் அதை சுவாசிக்கும் எங்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு நோய்கள் பரவிவருகிறது. எனவே அரசு அதிகாரிகள் எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மக்கள் மன்றம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாநகரில் உள்ள பஸ் நிலையங்களில் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்களை நிறுத்தாமல் தாறுமாறாக பஸ்களை நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் வள்ளிநாராயணன் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு அரசு ஆஸ்பத்திரியின் நுழைவுவாயில் பகுதியில் மினி பஸ் மற்றும் அரசு, தனியார் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறார்கள். இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்குள் ஆம்புலன்ஸ்கள் செல்ல மிகவும் சிரமாக உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு எந்தவித பஸ்களையும் நிறுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கலெக்டர் சி.கதிரவனிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் உள்ளன. மேலும் டாஸ்மாக் கடை எதிரில் பொது கழிப்பறையும் உள்ளது. இந்த கடையில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குடிமகன்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு மதுவாங்கும் குடிமகன்கள் ரோட்டில் வைத்து குடிக்கிறார்கள். பின்னர் மதுபோதை தலைக்கேறியதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, தாக்கி கொள்கிறார்கள். மேலும் அவர்கள் ஆபாசமாக பேசுவதுடன், அரைகுறை ஆடையுடன் ரோட்டிலும் விழுந்து கிடக்கிறார்கள். அங்குள்ள பொது கழிப்பறையையும் பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் எங்கள் பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும். மேலும் புதிய டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘உள்ளாட்சி துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு மாவட்ட ஸ்டிக்கர் ஆர்ட்டிஸ்ட் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘தமிழக அரசு, உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்த அனுமதி அளிக்காத நிலையில் சிலர் அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

பெருந்துறை அருகே உள்ள புலவர் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் தனியார் நிறுவனத்தின் நிதி உதவியில் குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. இதில் இருந்து எடுக்கப்படும் மண்ணை கொண்டு கரையை பலப்படுத்தாமல் தனியார் ஒருவர் தன்னுடைய நிலத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பிருந்தாவனம் வீதியை சேர்ந்த யாசோதா என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனது பெற்றோர் இறந்துவிட்டனர். எனது தந்தைக்கு சொந்தமான சொத்து துய்யம்பூந்துறையிலும், ஈரோடு காசிபாளையம் ஜீவா நகரில் வீடு உள்ளது. இன்னும் பாகப்பிரிவினை ஆகவில்லை.

இந்தநிலையில், எனது சகோதரர் கடன் பெற்றபோது, போலி ஆவணம் மூலம் எங்களது சொத்துகளையும் சேர்த்து கடன் கொடுத்தவர்கள் கிரையம் செய்துள்ளனர். அதனால் நாங்கள் அவர்கள் மீது அறச்சலூர் போலீசில் புகார் கொடுத்தோம். தற்போது எனது சகோதரருக்கு கடன் கொடுத்தவர்கள் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதேபோல் மொத்தம் 262 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முதல் -அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ஒருவருக்கு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையும், மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து 30 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 565 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களும், தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் மாதம் தலா ரூ.1,000 வீதம் 6 பேருக்கு ஓய்வூதிய உதவித்தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

Next Story