கவர்னர் கிரண்பெடி உரையுடன் புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது: செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது


கவர்னர் கிரண்பெடி உரையுடன் புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது: செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடி உரையுடன் புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

இதற்காக கவர்னர் கிரண்பெடி சட்டசபை வளாகத்துக்கு 9.25 மணிக்கு வந்தார். அவருக்கு போலீஸ் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரை சபாநாயகர் சிவக்கொழுந்து பூச்செண்டு கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கிற்குள் அழைத்து சென்றார்.

கவர்னர் கிரண்பெடி நேராக சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார். இதன்பின் தேசியகீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். 9.30 மணிக்கு தொடங்கிய அவர் தனது உரையை 10.20 மணிக்கு முடித்துக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் உரையின் சுருக்கத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து வாசித்தார். அதன்பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கவர்னர் கிரண்பெடி சட்ட சபையில் இருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

கவர்னர் சென்றதும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் கொண்டுவந்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று பேச முயன்றனர்.

ஆனால் அதற்குள், சட்ட சபையை இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக கூறி சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துவிட்டு சபை நடவடிக்கையை முடித்துக்கொண்டார்.

கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி தனது உரையை வாசிக்க தொடங்கியதும் எழுந்த அ.தி. மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் அரசையும், கவர்னரையும் குற்றஞ்சாட்டி பேசினார். ஆனால் அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அ.திமு.க. எம்.எல்.ஏ.க்களான அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் சபையில் இருந்து வெளியேறினார்கள். நேற்றைய கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தானை தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் அவரது அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபால், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் அன்பரசு, சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சனிக்கிழமைகளையும் சேர்த்து வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தேவைப்பட்டால் மாலையிலும் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Next Story