மதுரையில் போலீஸ் தேர்வு எழுதிய வழிப்பறி கொள்ளையன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்


மதுரையில் போலீஸ் தேர்வு எழுதிய வழிப்பறி கொள்ளையன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 27 Aug 2019 5:45 AM IST (Updated: 27 Aug 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

அழகர்கோவிலில் போலீஸ் தேர்வு எழுத வந்த வழிப்பறி கொள்ளையன் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை,

தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் போலீஸ் எழுத்து தேர்வு நடைபெற்றது. மதுரையை அடுத்த அழகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மையத்தில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து விண்ணப்பதாரர்கள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் வெளியே வந்த ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து தயாராக இருந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தேர்வு எழுத வந்த மற்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வாலிபரை போலீசார் எதற்காக அழைத்து சென்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் போலீசார் பிடித்து சென்ற அந்த வாலிபர் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மதுரை நகரில் புதூர், தல்லாகுளம், கூடல்புதூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் புதூர் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட ஒரு நபரின் அடையாளம் மற்றும் அவர் வந்த மோட்டார் சைக்கிள் தெளிவாக பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த்(வயது 22) என்பதும், அவரும், மற்றொவரும் சேர்ந்து தான் நகை பறிப்பில் ஈடுபட்டனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் விஜயகாந்தை தேடிச்சென்ற போது, அவர் வீட்டில் இல்லை. எனவே அவர் குறித்து அக்கம் பக்கத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயகாந்தின் நண்பர்கள், அவர் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளார். எனவே கண்டிப்பாக அவர் தேர்வு எழுத வருவார் என்றும், அவர் தேர்வு எழுத உள்ள இடத்தையும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அழகர்கோவில் பகுதியில் அவர் தேர்வு எழுதும் இடத்தில் ரகசியமாக காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் எதிர்பார்த்தது போன்று விஜயகாந்த் தேர்வு எழுத வந்து, அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதினார். இவை அனைத்தையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பின்னர் விஜயகாந்த் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை மதுரை புதூர் போலீசில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர் மதுரையில் தல்லாகுளம், கூடல்புதூர், புதூர் பகுதியில் 7 வழிப்பறி சம்பவங்களை நிகழ்த்தியதாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து புதூர் போலீசார் விஜயகாந்தை கைது செய்தனர்.

Next Story