அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து, பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 342 பேர் கைது


அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து, பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 342 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2019 4:00 AM IST (Updated: 27 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 342 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 8 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி கூட்டு ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரணி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நன்மாறன் தலைமையில் அக்கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் நன்மாறன், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் செந்தமிழ், செஞ்சி நகர செயலாளர் செஞ்சி சிவா உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரவாண்டி பஸ்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன் தலைமையில், அக்கட்சியினர் பஸ்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன். நகர செயலாளர் சந்தர். விக்கிரவாண்டி நகர பொருளாளர் புருஷோத்தமன், மாவட்ட துணை அமைப்பாளர் பரசுராமன், மாவட்ட தொண்டரணி செயலாளர் கிட்டு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் கைது செய்தார். இதேபோல் பற்குணம் தலைமையில் நடந்த சாலை மறியலில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமையில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் 60 பேர் கலந்து கொண்டனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யக்கோரி திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையில் உள்ள நீதிமன்றம் எதிரே விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயன், சுப்பையா, சக்கரவர்த்தி, ஜெயமூர்த்தி, ரங்கராஜன் உள்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து வக்கீல்கள் கலைந்து சென்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி மேலும் இரண்டு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

இதே போல் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் திலீபன், திண்டிவனம் தொகுதி செயலாளர் வக்கீல் பூபால், திண்டிவனம் நகர செயலாளர்கள் இமயன், மயிலம் தொகுதி செயலாளர் செல்வசீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக சேரன் உள்பட 60 பேரை திண்டிவனம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

இதேபோல் திருநாவலூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஓவியர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியினர் கெடிலம் கூட்டுரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

உளுந்தூர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட அறிவுக்கரசு உள்பட 15 பேரை கைது செய்தனர்.

கண்டமங்கலம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் சார்பில் நேற்று கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்துக்கு கண்டமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தமிழ்குடி, முருகவேல் வானூர் தொகுதி செயலாளர் பால்வண்ணன், மாநில நிர்வாகிகள் செம்மல், பழனிவேல் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மறியல் பற்றி தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து மறிலியல் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

வானூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நான்கு முனை சந்திப்பு அம்பேத்கர் சிலை அருகே மறியல் போராட்டம் நடந்தது.

இந்த மறியலுக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதனை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

அதேபோல் கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகர தலைவர் அகமது உல்லா தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மறியல் பற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதே போல் திருவெண்ணெய்நல்லூரியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த மறியலில் 32 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் 342 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சார்பில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டகுழு பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் சங்கராபுரம்-செல்லம்பட்டு செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேப்போல் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

Next Story