பாம்பன் ரெயில் பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை


பாம்பன் ரெயில் பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து 6 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் 5-வது நாளாக தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அை-னைவரும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் மதுரையில் இருந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பாம்பன் ரெயில் பாலம் முழுவதும் அவர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். குறிப்பாக, பாலத்தின் கர்டருக்கு அடியில் உள்ள தூண்களில் ஏதேனும் மர்ம பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் நவீன கருவி மூலம் சோதனை செய்தனர். பாலத்தின் மைய பகுதியான தூக்குப்பாலத்திலும் தீவிர சோதனை செய்தனர். தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் ராமேசுவரம் ரெயில் நிலையத்திலும் சோதனை செய்தனர்.

ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 3 கப்பலும் மற்றும் கடற்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Next Story