புதுப்பேட்டை அருகே, 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகைகள் கொள்ளை


புதுப்பேட்டை அருகே, 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே நள்ளிரவில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவருடைய வீட்டின் அருகிலேயே அவரது தம்பி அருள்(46) என்பவர் வசித்து வருகிறார். அண்ணன்-தம்பி இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை ராஜா, அருள் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் பண்ருட்டிக்கு சென்றனர்.

பின்னர் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது ராஜா, அருள் ஆகியோரது வீடுகளின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பீரோக்கள் இருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது 2 பேர் வீடுகளிலும் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் ராஜா தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகளையும், அருள் வீட்டின் பீரோவில் இருந்த 4 பவுன் நகையையும் காணவில்லை.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 வீடுகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராஜா, அருள் ஆகியோர் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர் வீடுகளின் பின்பக்க கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோக்களை உடைத்து 2 வீடுகளிலும் மொத்தம் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கடலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள், 2 வீடுகளிலும் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து சென்றனர். மேலும் மோப்பநாய் அர்ஜூன், கொள்ளை நடந்த வீடுகளில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் மர்மநபர்கள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story