சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம்- போதை பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்,
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த குமுதமலர்(வயது41) என்ற பெண் பயணியின் சூட்கேசை சோதனை செய்தபோது, அதில் ரகசிய அறைக்குள் 12 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ரூ.2.52 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக குமுதமலரை கைது செய்தனர். மேலும் அவர் யாருக்காக அந்த தங்கத்தை மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?. அவர் சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? என விசாரித்து வருகின்றனர்.
ரூ.1 கோடி போதை பொருள்
சென்னை விமான நிலைய சரக்ககத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்ப இருந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வளையல்கள் என குறிப்பிடப்பட்டு இருந்த 25 டப்பாக்களை சந்தேகத்தின்பேரில் திறந்து பார்த்தனர்.
அதில், 110 கிலோ எடைகொண்ட ‘எபிடிரின்’ என்ற போதை பொருள் இருப்பது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும். வளையல்கள் எனக்கூறி, போதை பொருளை சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிந்தது.
இந்த டப்பாவை இலங்கைக்கு அனுப்ப முயன்றவரின் முகவரியை வைத்து விசாரித்தபோது அது போலி என தெரியவந்தது. இதையடுத்து போதை பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதை இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பலை தேடி வருகின்றனர்.
கழிவறையில் கிடந்த தங்கம்
சென்னை பன்னாட்டு முனையம் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவர் சுத்தம் செய்தார். அப்போது கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் கருப்பு நிற பார்சல் இருப்பதை கண்ட அவர், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 2 தங்க கட்டிகள் இருந்தது. வெளிநாட்டில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த மர்மநபர்கள், விமான நிலையத்தில் அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக அதை கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது.
200 கிராம் எடைகொண்ட அவற்றின் மதிப்பு ரூ.7.8 லட்சம் ஆகும். அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ.3 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story