வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: சென்னையில் 15 இடங்களில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் 395 பேர் கைது
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து சென்னையில் 15 இடங்களில் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து 395 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை அண்ணாசாலை அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல சென்னை பெரியமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
395 பேர் கைது
வேதாரண்யம் சம்பவத்தை கண்டித்து சென்னையில் திருவான்மியூர், தாம்பரம், ஆவடி, செங்குன்றம் உள்பட மொத்தம் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் நடைபெற்றது. புழல் கேம்ப் பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 395 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் 700 பேர் பங்கேற்று அமைதியாக கலைந்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story