விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்; போலீஸ் தடியடி - பஸ் மீது கற்களை வீசிய 3 பேர் கைது
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விருத்தாசலம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பஸ் மீது கற்களை வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் பஸ் நிறுத்தத்தில் விருத்தாசலம்-சேலம் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னாள் ஒன்றிய செயலாளர் தென்றல் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதற்கிடையே சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ்சை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்து, அதன் மீது கற்களை வீசினர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதற்கிடையே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் ஜெயா, விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்றல் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அரசு பஸ் டிரைவர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி இலுப்பை தோப்பை சேர்ந்த மணிவேல் (வயது 43), விருத்தாசலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பஸ் மீது கற்களை வீசி, டிரைவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தொரவளூரை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்(39), ராஜி(32), மதிவாணன்(27) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story