ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கடைகளுக்கு முன்னுரிமை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கடைகளுக்கு முன்னுரிமை கேட்டு நெல்லை டவுன் மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நெல்லை டவுனில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. உள்ளூர் விற்பனைக்கு இந்த மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இந்த மார்க்கெட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் நகரின் மையப்பகுதியில் இருப்பதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் நெல்லை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமயமாக்கப்படுகிறது.
அதற்காக மார்க்கெட்டில் உள்ள கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. புதிய காய்கறி மார்க்கெட்டில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் மூலம் கடைகள் டெண்டர் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை கண்டித்து வியாபாரிகள் நேற்று திடீரென்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து விட்டு, வேன் மூலம் வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாலைராஜா தலைமையில் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மனோகரன் மற்றும் வியாபாரிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் வியாபாரிகள் சங்கம் சார்பில் கலெக்டர் ஷில்பாவிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், “நாங்கள் நெல்லை டவுன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட்டில் 40 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். இந்த மார்க்கெட்டை நம்பி சுமார் 1,000 குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக எங்கள் கடையை காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முதலில் புதிய கடைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்தனர். தற்போது முன்னுரிமை கிடையாது என கூறுகிறார்கள். இதனால் மார்க்கெட்டை நம்பி பிழைப்பு நடத்தி வரும் குடும்பங்கள் பாதிக்கப்படும். எங்களுக்கு வேறு இடம் கொடுக்க வேண்டும். இந்த நோட்டீசை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டும் புதிய கடைகளில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர் ஷில்பா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. திடீரென்று கடைகள் அடைக்கப்பட்டதால் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சங்க தலைவர் மாலைராஜா கூறுகையில், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.
முன்னதாக மனு கொடுக்க வியாபாரிகள் கூட்டமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முக்கிய பிரமுகர்கள் 10 பேரை மட்டும் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்கள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story